9) கரும்புள்ளியான் :-
பாண்டியன் குளத்திலிருந்து மல்லாவி செல்லும் வீதியில் கரும்புளியங்குளம் என முன்னர் அழைக்கப்பட்ட இடம் இன்று கரும்புள்ளியான் என திரிபடைந்து அழைக்கப்படுகிறது. கரும்புள்ளியான் குளக்கட்டு ஆரம்பிக்குமிடத்திற்கு 500 மீற்றர்கள் முன் உள்ள திட்டையாக அமைந்த பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் கருங்கற்களும், செங்கற்களும் கொண்டு அமைக்கப்பட்ட கோயிற்கட்டட இடிபாடுகளும் மட்பாண்ட எச்சங்கள் பலவும் நிலத்தின் வெளிப்புறத்தே சிதறிக் கிடக்கிறது.
தற்போது அவ்விடத்தில் சில வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சிவாலயம் ஒன்றுள்ளது. இச்சிவாலயம் அமைந்துள்ள காணிப்பரப்பினுள் ஏராளமான மட்பாண்டச் சிற்பங்களின் சிதைவுகளும், கருங்கற் பாறையினால் செதுக்கப்பட்ட கற்றூண்கள் மேடைவடிவப் பாறைகளும் தென்படுகிறது. ஆலயத்தின் நேர் கிழக்கில் 100 மீற்றர் தூரத்தில் பழைய பாழடைந்துபோன கேணி அமைப்பு ஒன்றும் காணப்படுகின்றது. இதன் படிகள் கருங்கற் பாறைகளைக் கொண்ட அமைக்கப்பட்டிருப்பதோடு 15 அடி ஆழத்திற்கு மேற்பட்டதாகவும் காணப்பட்டது.
20 வருடங்களுக்கு முன்னர் காணி உரிமையாளர் இவ் கோணியை தோண்டிப் பார்க்க முற்பட்டபோது அதனுள் இருந்து சில சிற்பங்களும், மட்கலங்கள், சில உலோகப் பாத்திரங்களும் வெளி;ப்பட்டன. அனால் அன்றைய காலத்தில் அச்சங்காரணமாக மேலும் தோண்டாமல் இக்கேணியை விட்டுவிட்டனர். அதனுள் குப்பை கூழங்களைப் போட்டு கேணியை நிரப்பிவிட்டனர். தனியாருக்குச் சொந்தமான காணிகளாகவே இருந்ததனால் எந்நேரமும் யாரவும் சென்று பார்ப்பது சிரமமானதே தற்போது தூர்த்தழிக்கப்பட்ட நிலையில் காணப்படும் அவ்விடம் சிறிய நீர்தேங்கும் குட்டை போன்று காட்சியளிக்கிறது.
அநேகமாக இக்கேணியினை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்துவதன்மூலம் மேலும் ஏராளமான தொல்லியற் பொருட்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். அதன்மூலம் இப்பிரதேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் பற்றியதான தகவல்களைத் துல்லியமாக அறியமுடியும். பயிற்செய்கையின் பொருட்டு இப்பகுதியிலிருந்த ஏராளமான தொல்லியற் சான்றுகள் சிதைவடைந்த போதிலும் வீதியாற் செல்பவர்கள் இலகுவாக அடையாளங் காணப்படக்கூடிய வரலாற்றுத் தொல்லியற் தளமாகவே இதைக்கணிக்கமுடியும்.
நீண்டகாலமாக கவனிப்பாரற்று ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் இருந்த இவ்விடம் தற்போதுதான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியலாளர் புஸ்பரட்ணம் அவர்கள் நேரடியாகப் பார்வையிட்டதோடு தொல்லியற் சான்றுகளைப் படியெடுத்து ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறார்.
இங்கே கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாய்த்தெய்வ வழிபாட்டு உருவங்களாகவே கணிக்கப்படுகிறது. இவ்தொல்லியற் தடயப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தின் ஆவுடையார் பகுதி பல்லவர்கால (7-9 நூற்றாண்டு) காலப்பகுதிக்குரிய கலைவடிவமாகவே தென்படுகிறது. அத்தோடு கருங்கற்களாலான கயலட்சுமி வடிவம் பொறிக்கப்பட்ட எல்லைக்கற்கள் சிலவும் அங்கே கண்டெடுக்கப்பட்டது. கயலட்சுமி வடிவம் பொறிக்கும் முறை 12 நூற்றாண்டு காலப்பகுதியைச் சேர்ந்ததாகவே பொதுவாகக் கணிக்கப்படுகிறது.
ஆகவே இப்பிரதேசம் நீண்ட தொடர்ச்சியான மக்கள் வாழ்விடமாக இருந்ததற்காக வலுவான சான்றாதாரமாக கொள்ளலாம். இலங்கையின் வரலாற்றுக் காலங்களில் உத்தரதேசம் என அழைக்கப்பட்ட நாகவம்ச ஆட்சிக்காலத்தில் முக்கியமான ஆட்சிமையங்களின் பகுதியாக இது இருந்திருக்கக் கூடும் ஏனெனில் இதன் மேற்குத்திசையில் கல்விளானில் ஓர் குடியிருப்பு மையமும், தெற்கில் பனங்காமம் மையமும், கிழக்கில் பாலிநகர மையமும் (வவுனிக்குளம்), வடக்கே மல்லாவியில் ஒரு மையமுமாக இவ்விடத்திலிருந்து ஐந்து மைல் சுற்றிளவிற்குள் நாற்புறமும் குடியிருப்பு மையங்கள் இருப்பதனை நோக்குமிடத்து மேற்குறிப்பிட்ட முடிவுக்கு வருவது இயல்பானதே. ஆகவே இப்பகுதி விரிவான ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் வட இலங்கையின் மனிதக்குடியமர்வுகள்ளின் ஆரம்பகாலம் பற்றிய சான்றாதாரங்கள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் பல உள்ளன.
10) பனங்காமம் :-
வன்னியின் ஆதிக்குடியிருப்புகளில் ஒன்றான பனங்காமம் கிராமத்தின் சுற்றுப்புறமெங்கும் ஏராளமான தொல்லியற் சான்றுகளைக் காணமுடியும். கருங்கற்றூண்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட மண் திடல்களும், வட்டவடிவமாக நிறுவப்பட்ட கற்றூண்கள், மட்பாண்டத் துண்டங்கள், கட்டடச் சிதைவுகள், போன்றவற்றை காணமுடியும்.
பறங்கியாற்றின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள பனங்காமமும், அதற்கு அருகிலுள்ள இளமருதங்குளப் பகுதியிலும் காணப்படுகின்ற கட்டட இடிபாடுகள் இன்றுவரை முறையான தொல்லியற் பகுப்பாய்வுக்குட்படுத்தப்படவில்லை. இவ்வாறே பறங்கியாற்றின் மேற்குப்பகுதியில் நாட்டப்பட்ட நிலையிலிருக்கின்ற கற்றூண்களும், செயற்கையாக உருவாக்கப்பட்ட மண் திட்டுக்களும், அக்காலப்பகுதியின் முக்கிய மனிதர்களின் சவஅடக்கவிடமாவோ அல்லது நினைவிடங்களாகவோ இருக்கலாமென ஊகிக்கக் கூடியவகையிலான அமைப்பு முறைகளே அப்பகுதியில் காணப்படுகின்றது.
மேலும் பனங்காகம் சிவன் கோயில் சுற்றுவட்டமும் மிக மக்கியமான தொல்லியற் சான்றுகளைக் கொண்ட பகுதியாக காணப்படுகிறது. சிவன்கொயிற் சுற்றாடலில் மண்ணுள் புதையுண்டு காணப்படுகின்ற கட்டட இடிபாடுகள் சோழர்கால கட்டடக்கலை வடிவமைப்பை கொண்டிருக்க கோயிலினுள்ளே இருக்கின்ற சிவலிங்கம் பல்லவர்காலத்தில் அதாவது 7ம்-8ம் நூற்றாண்டுகளில் வடிவமைக்கப்பட்ட சிற்ப வடிவமைப்பைக் கொண்டிருப்பதோடு சிவலிங்கத்தை மிக உற்று நொக்கினால்அதில் ஒரு வேல் வடிவம் பொறிக்கப்பட்டு தலைப்பகுதியில் ஒரு முக வடிவம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வகை சிவலிங்கம் பல்லவர் காலத்திற்குரியதென தொல்லியலாளர் புஸ்பரட்ணம் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இச்சிவன் கோயிலின் சுற்றுப்புறத்தில் காணப்படுகின்ற மட்பாண்ட ஓடுகளும், மட்பாண்டச் சின்னங்களும் பெருங்கற்காலப்பண்பாட்டு நாகரிக காலத்திற்குரியதென குறிப்பிடப்படுவதனால் பனங்காமம் பகுதி மிக நீண்ட தொடர்ச்சியான தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாதாரங்களை இன்று தரக்கூடிய அல்லது பறை சாற்றுகின்ற இடமாகவே கொள்ளப்படுகிறது.
சோழர் ஆட்சியின் தொடர்சியாக வன்னிக்குறுநில மன்னர்களின் ஆட்சியியல் மையமாக பனங்காமம் இருந்தமையை நவீன வரலாற்றுப்பதிவுகள் உறுதி செய்வதும் பனங்காமத்தில் மிகச்சிறந்த ஆட்சியாளனாக வன்னியர் திலகம் என்றழைக்கப்பட்ட கைலாயவன்னியனார் அரை நூற்றாண்டுகள் ஒல்லாந்தருக்கு அடிபணியாமல் ஆட்சி செய்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
எனினும் நீண்ட தொடர்ச்சியான தமிழ்மக்களின் வாழிடமாக கருதப்படுகின்ற பனங்காமமும், அதன் சுற்றுப்புறமும் உள்ள புராதன குடியிருப்புக்களும் அவற்றின் தோற்றம் பற்றியதான உறுதிபடக்கூறக்கூடியவாறான தொல்பொருள் ஆய்வுகள் எதனையும் யாரும் முறையாக இதுவரை மேற்கொள்ளவில்லை.
தொடரும்…