Saturday, 13 August 2016

கொட்டியாரத்தின் வரலாற்று தொன்மையில் பெருங்கற்கால பண்பாட்டின் சம்பூர் சுடு மண் சிற்பங்கள்

பாலசுகுமார் ,முன்னாள் பீடாதிபதி,கலை கலாசார பீடம் ,கிழக்குப் பல்கலைக்கழகம்

கொட்டியாரத்தின் வரலாற்று தொன்மையில் பெருங்கற்கால பண்பாட்டின் சம்பூர் சுடு மண் சிற்பங்கள்
மனித நாகரிகத்தின் தொன்ம வரலாற்றை வரலாற்று காலம் என தொல்லியல் வரலாற்றாரச்சியாளர்கள் பகுத்துள்ளனர்.
1.பழங் கற்காலம்
2.புதிய கற்காலம்











3.இடைகற்காலம்
4.பெருங்கற்காலம்
என வரையறுக்கப் பட்டுள்ளது.
பழங் கற்கால பண்பாட்டில் கற்பாறைகளின் பயன் பாடும் கல்லாயுதங்களும் முக்கியப்பட இடை கற்காலம் புதிய கற் காலம் ஆகியவற்றில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகளையும் வெளிப்படுத்துவனவாக பாறை ஓவியங்களும் வேட்டை கருவிகளும் உலகெங்கும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.
பழங்கற்கால மக்களின் பொருட்கள்
புதிய கற்கால ஓவியங்கள் இத்தகய ஓவியங்கள் தமிழ் நாட்டில் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.
புதிய கற்கால ஓவியங்கள்
பெருங்கற்கால மக்களின் வாழ்வியலில் புதை குழி கலாசரம் முக்கியப் படுகிறது இதனோடு இணைந்தே சிறிய சுடு மண் சிற்பங்கள் முக்கியப் படுகின்றன.இதனை, 1823ம் ஆண்டு அப்போதைய மலபார் பகுதிகளில் ( கேரள மாநிலம் ), ஆய்வு செய்த பேபிங்டன் என்ற ஆங்கிலேய தொல்லியல் ஆய்வாளர் வெளி உலகுக்கு கொண்டு வந்தார். இவர், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரம், வாழ்வியல் முறைகளை, பல்வேறு ஆதாரங்களுடன் பதிவு செய்தார்.
தமிழ் நாட்டு சுடு மண் சிற்பம்
இதன்பின்பு தான், இந்தியாவின் தென்மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும், தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் பெருங்கற்காலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.பல கண்டு பிடிப்புகளையும் செய்தனர்.
தமிழகத்தில், ஈரோடு கொடுமணல், திருநெல்வேலி ஆதிச்சநல்லுார், நீலகிரி தெங்குமரஹாடா, மசினகுடி, கோத்தகிரி, ஏக்குனி, நீர்காய்ச்சிமந்து ஆகிய பகுதிகள், பல்வேறு வரலாற்று பதிவுகளை உள்ளடக்கியதாக உள்ளன.
நீலகிரியில், 1873ம் ஆண்டு அப்போதைய கமிஷனராக இருந்த பிரீக்ஸ் என்ற ஆங்கிலேயர், முதன்முதலாக, பெருங்கற்கால புதை குழிகளில் இருந்த சுடுமண் சிற்பங்கள் மற்றும் கலை பொருட்களை கண்டறிந்தார். அவரால் சேகரிக்கப்பட்ட, புராதாண கலைப்பொருட்கள், சென்னை அரசு அருங்காட்சியத்திலும், லண்டன், பெர்லின் போன்ற பிரபலமான அருங்காட்சியகங்களிலும், இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது
நீலகிரி சுடு மண் சிற்பங்கள்
பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் இறந்து விட்டால், அவர்களின் சடலத்தை புதைக்கும்போது, அதனுடன், நம்முடன் வாழும் கால்நடைகள் உட்பட பல்வேறு பொருட்கள், சுடுமண் சிற்பங்களை, போட்டு புதைத்து மரியாதை செலுத்துவதை அக்கால மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால், பெரும்பாலான புதை குழிகளில் இத்தகைய சிற்பங்கள் காணப்படுகின்றன.
கடந்த,1983, 84, 88, 91 ஆகிய ஆண்டுகளில், அமெரிக்காவில் உள்ள, சிக்காகோ மெக்சிகன் பல்கலைக் கழக பேராசிரியர் ஆலன் சாகிரல் என்பவர், தமிழ் நாட்டுக்கு வந்து, பெருங்கற்கால புதை குழிகள் பற்றி ஆய்வு செய்து, பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவை மாணவர்களுக்கான பாடங்களாகவும் உள்ளன.மேலும், இந்த கலாச்சார பரிமாற்றங்கள் அக்காலத்தில், நீலகிரியில் உள்ள மாயார் பள்ளத்தாக்கு; கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதிகளில் இருந்து
தான், இந்த கலாச்சாரம் இங்கு பரவியுள்ளது என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்தது.
இந்த ஆண்டில் நீலகிரி மலை பகுதியில் தொல்லியல் ஆர்வலர் ரவிச்சந்தரன் மற்றும் குழுவினரால், உடைந்த நிலையில் சிதறி கிடந்த சுடுமண் சிற்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அப்போது, அப்பகுதியில் உள்ள புதைக்குழி, கிணறு வடிவ கல்லறை போன்றவை 2000 ஆண்டுகளை கடந்தும், பாதுகாப்புடன் இருந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிணறு வடிவ கல்லறையில் கிடைக்கப்பெற்ற, பெருங்கற்கால மக்களின், சுடுமண் சிற்பங்களில், எருமை, யானை, ஆடு, சிறிய சட்டிகள் ஆகியவை இருந்ததை ஆறிய முடிகிறது
இலங்கையில் தமிழர்களின் பூர்விக வாழ்விடங்களில் இத்தகய சுடுமண் சிற்பங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன
1960களில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் ஸ்ரீலங்கா தொல்லியல் ஆணையாளர் கலாநிதி எஸ்.யு. தெரனியகலை சுடுமண் சிற்பங்களை கண்டெடுத்தார். இவையுடன் ஒத்தவையாக ஆனைவிழுந்தான் சிற்பங்கள் இருக்கின்றன. மல்லாவி சிற்பங்கள் இவற்றிலிருந்து வேறுபட்ட உள்ளன.
உருத்திரபுர சிற்பங்கள் 2000 ஆண்டுகளிற்கு முற்பட்டவை என எஸ்.யு தெரனியகலை தெரிவித்திருந்தார். இவற்றைவிட கிளிநொச்சி உருத்திரபுரத்தில் எடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள் வவுனியா நகர ஸ்ரீலங்கா தொல்பொருட்கலைச்சாலையில் உள்ளன
2004ம் ஆண்டில் மல்லாவியிலும் இத்தகய சிற்பங்களின் கண்டு பிடிப்பு நிகழ்ந்தது
மல்லாவி சிற்பங்கள்
.மல்லாவியின் வயற்பகுதி ஒன்றில் வரம்புப் பாதை துப்பரவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கையில் சுடுமண் சிற்பங்கள்,மக்களால் கண்டெடுக்கப்பட்டன. பாதை துப்பரவுப் பணியின்போது மண்வெட்டிகளால் பொருட்கள் உடைபட்டுமுள்ளன. ஆனாலும் பின்னர் அவை பாதுகாப்பான முறயில் கையாளப்பட்டன..
இந்த சுடுமண் சிற்பங்கள் பெண் உருவங்களாக உள்ளன. அங்கு 5 மனித உருவங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று தலைப்பகுதியாக மட்டும் கிடைத்தது. மற்றொன்று தலைமுதல் இடுப்புவரையான பகுதியுடன் கிடைத்திருக்கிறது, இன்னொன்று தலை முதல் அடி வரையும்,மற்றொன்று தலை முதல் மார்பு வரையும், வேறொன்று முண்டமாகவும் கிடைத்துள்ளன
இதனைப் போலவே 2011ம் ஆண்டில் சாஸ்திரி கூழாங்குளத்தில் பொதுநோக்கு மண்டபம் ஒன்றிற்கு மண் இடுவதற்காக அருகிலுள்ள குளத்திலிருந்து மண் எடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை பரவும் போது அவற்றிலிருந்து சில மண் சிற்பங்களை மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
சாஸ்திரி கூழாங்குழ சுடு மண் சிற்பங்கள்
பின்னர் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் தலைமையிலான குழு வவுனியா சென்று குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் பொருமளுவு சிற்பங்களை ஆய்வுக்காக யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்திற்கு கொண்டு சென்றனர்
இது குறித்து பேராசிரியர் புஸ்பரட்ணம் கருத்துப் பகர்கையில் இற்றைக்கு இரண்டாயிரத்து 2000 வருடங்களுக்கு முற்பட்ட சிற்பங்களே அங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,
தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப்போன்று அந்த சிற்ப அமைவுகளைப்போன்றே இங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களும் உள்ளன என்று குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது
இந்த ஒரு பின்னணியிலேயே நாம் சம்பூரில் அண்மையில் கண்டெடுக்கப் பட்ட சுடு மண் சிற்பங்களையும் பார்க்க வேண்டும்
சம்பூர் சுடு மண் சிற்பங்கள்
சம்பூரை உள்ளடக்கிய கொட்டியார பிரதேசம் தமிழ் மக்களின் பல்லாயிரம் வருச பழமை வரலாற்று சான்றுகளை கொண்டுள்ளது. வெருகல் பிரதேசத்து முதுமக்கள் தாழி,வெருகல் மலை பிராமி கல்வெட்டுகள் ,கட்டைபறிச்சான் கச்சகொடிமலை தமிழ் பிராமி கல்வெட்டு ,சேனையூர் பெண்டுகள் சேனை தொல் அடையாளங்கள் என நீண்டு செல்லும் தொல்லியல் சான்றுகளில் முக்கிய திருப்பு முனையாக சம்பூரில் கண்டெடுக்கப் பட்ட சுடுமண் சிற்பங்கள் உள்ளன
ஏனய இடங்களில் காணப் பட்டதை விட இதில் செய் நேர்த்தி காணப் படுவதோடு பல ஒற்றுமைகளையும் காணலாம்.
இவை பெருங் கற்காலப் பண்பாட்டுக்குரிய ஆதாரங்களே. தமிழர்களின் மிகத்தொன்மையான கலை வடிவங்கள் சுடுமண் ஆக்கங்களிலேயே உள்ளன. சிந்துவெளி முதல் தமிழகம் ஆதிச்ச நல்லூர் வரை அதன் நீட்சி வன்னியிலும் இன்று சம்பூர் வரை நீண்டுள்ளதை இது நிருபிக்கிறது.தமிழரின் தொன்மை கலை சான்றுகளாக சுடுமண் சிற்பங்களே உள்ளன .அதுவே நம் பூர்விக கலை.அதன் தொடர்ச்சியே கற் சிற்பங்கள் .
சம்பூர் சுடு மண் சிற்பங்களில் உள்ள பெண்ணுருவங்கள்,யானையின் வடிவம் முக உருவங்கள் விளக்கின் தாழ்பாள் போன்றவை தமிழரின் தொன்ம சிற்பக் கலையின் சுவடுகளறதோடு ஒரு தாழியின் எஞ்சிய பகுதியும் இங்கு காணப் படுகிறது.கிட்டத்தட்ட 2500 வருசங்களுக்கு முந்தய ஒரு நாகரிகத்தின் எஞ்சிய பதிவுகளாகவே இவற்றை இனங்கான முடியும் .
நீலகிரியில் கண்டெடுக்கப் பட்ட சிற்பங்களுக்கும் சம்பூர் சிற்பங்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை அதன் அமைப்பிலும் நேர்த்தியிலும் தெரிகிறது.
இதில் ஆர்வத்தோடு செயல் படும் மதுரன்.ரதன் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்.

Thursday, 11 August 2016

மாவலி கொண்ட ஈழ நிலம் (நாவல்)பகுதி -1

திருக்கரசையில்....

(ஒரு நெடுங்கதையின் தொடக்கம்)

மாவலியாற்றின் அழகில் சொக்கிக் கிடந்தான் இராஜேந்திர சோழன் .இன்று ஆடிப் பெருக்கு காவிரி ஆறு எப்படி கரை புரண்டு ஓடுமோ அது போல மகாவலி கங்கையும் கரைகளில் வெண்ணிற நுரைகளை பனிப் படலம் போல் பரப்பிக் கொண்டு வெருகல் கழிமுகத்தை முத்தமிடும் அழகை ரசித்தான்

 ராஜேந்திரன்  காவிரியின் அழகில் லயித்துப் போவான் ஆடிப் பெருக்கு நாளில் காவிரிக் கரையெங்கும் மக்கள் மகிழ்ச்சிவெளத்தில் மிதப்பதை பக்கத்திலிருந்து பார்த்து  பழகியவன்.இன்று ஆடிப் பெருக்கு நாளில் மகாவலி கங்கையில் அந்த கொண்டாட்டங்களின் தொடர்ச்சியை காண ஆவலுடன்  காத்திருந்தான்.

தமிழும் கலையும் சைவமுமாய் இணைந்து அவன்  எழுப்பிய கங்கை கொண்ட சோழ புரத்தை உருவாக்கியதைப் போல .ஈழக் கரையில் மகாவலி கொண்ட திருமங்கலேஸ்வரத்தை அமைத்திருந்தான்.வெருகல் துறைமுகத்தில் நின்று பார்க்கும் போது திருமங்கலேஸ்வர் கோபுரம் அவன் பெருமையயை பறைசாற்றியது.

திருமங்கலாயின் திருக்கரசை தீர்த்தக் கரை மக்கள் வெள்ளத்தில் மகிழ்ந்து கிடந்தது ஆடித் தீர்த்த விழாவுக்காக கொட்டியாரத்தின் எல்லா ஊர்களிலிருந்தும்  கூடியிருந்தனர்.

திருக் கரசை காணிக்கை பொருட்களால் நிறைந்து கிடந்தது.மூதூரிலிருந்து முத்தும்,சேனையூரிலிருந்து இலுப்பை நெய்,இலுப்பஞ்சர்க்கரையும்,மலைமுந்தலிலிருந்து தேனும்,சம்பூரிலிருந்து சங்கும்,பொன்னும்,பள்ளிக்குடியிருப்பிருந்து பாலும் ,தயிரும்,நெய்யும்,கிளிவெட்டியிருந்து நெல்லும் அரிசியும்,மல்லிகைத் தீவிருந்து மாலைகளும் மலர்களுமாய் குவிய.கட்டைபறிச்சானிருந்து சந்தணம் கொண்டு வர,வெருகலிலிருந்து வெண்தாமரையும்,ஈச்சிளம் பற்றிலிருந்து செந்தாமரை மலர்களும்  மலையாய் குவிய தமிழில் மந்திரங்கள் ஒலிக்க திருக் கரசை மயங்கிக்  கிடக்கும் நாள் அது

ராஜேந்திரன் அந்த திருக்கரசையயை நோக்கித்தான் தன்  அரச பிரதானிகளும் படைகளும் சூழ தன்  வெண் புரவியில் பவனி வந்து கொண்டிருந்தான்.தமிழ்நாட்டு தஞ்சை மண் போல வயல் வெளிகளால் நிறைந்திருக்கும் கொட்டியாரத்தின் அழகை ரசித்தபடி பயணம் செய்தான்.ஆறும் ஆற்றிடை வெளிகளும்.வாய்க்காலும் வரப்பும.சேற்றிடை விரியும் சென்னெல் களனிகளிலும் தன் மனதை பறிகொடுத்த படி நகர்ந்தான் அவன்.

ஆடித் தீர்த்தம் ஈழத்தில் எங்கும்  இத்தனை சிறப்பாய் கொண்டாடப் படுவதில்லை.வற்றாத நதியாய் மாவலியாளின் படுக்கை விரிப்பு திருக்கரசை.நீண்டிருக்கும் மணல் வெளி,ஆங்காங்கே ஆரைப் பற்றைகளின் சங்கமம்.மருத மரங்களின் நீட்டம்.விண்ணுயர் மரங்கள் காற்றில் மோதி எழுப்பும் ஒலி விண் கட்டியாடும் விளையாட்டை நினைவு படுத்த இயற்கையின் அதிசயமாய் கரசையம்பதி சாட்சி சொல்லியது.

ஆண்டுக்கொரு முறை கரசை தீர்த்தம் நடை பெறுவதில் அதிசயம் ஒன்றுமில்லையே .என்ன  சிறப்பு இன்று ,பொலநறுவை ஜனநாத மங்கலம்,தம்பலகாமத்து சதுர்வேதி மங்கலம் என சோழ ஆட்சி தலைவர்கள் ஈழ தேசத்த்தின் புலவர்கள் என அறிவோர் கூடலும்,அரசாள்வோர் கூடலுமாய் திருக்கரசை திமிலோகப் பட்டது.

வாழ்த்தொலி விண்ணை பிளக்க ராஜேந்திரனின் திருக்கரசை வரவு அறியப்பட,மக்கள் முண்டியடித்துக் கொண்டு மன்னனைப் பார்க்க  முட்டி மோதினர்.

கரசை மணல் திட்டில் அலங்கரிக்கப் பட்ட பந்தல் புலவர் பெருமக்கள் எல்லாம் கூடியிருக்கின்றனர் மன்னன் அந்த இடத்துக்கு விரைகிறான் மும்முடிச் சோழன் வாழ்க என புலவர்கள் பண்ணிசைக்க அவர்கள் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டு ராஜேந்திரன் தனக்கான இருக்கையில் அமர்கிறான்.

எல்லோரும் யாரையோ எதிர்பார்த்திருக்கின்றனர் மன்னனும்  பொறுமையாய் எதிர்பார்ப்புடன் இருக்கிறான்.அப்போது கரசைப் புலவர் வாழ்க என்ற வாழ்த்தொலி விண்ணைப் பிழக்கிறது பல்லக்கில் பலபேர் சுமக்க கரசைப் புலவர் அழைத்து வரப் படுகிறார் .மன்னர் பெருமகனுக்கு வாழ்த்தும் வணக்கமும் சொன்ன கரசைப் புலவர் தனக்கான தனி இருக்கையில் அமர ,புலவர் பெருமக்கள் ,கரசைப் புலவரை வாழ்த்தி திருக்கரசை புராண காவியத்தை அரங்கேற்றும் படி சொல்ல .மன்னனும்  தன் வாழ்த்தை வெளிப்படுத்த.அறிஞர் பெருமக்கள் ஆவலுடன் காத்திருக்க கரசைப் புலவர் திருக்கரசை புராண காவியத்தை பாடத் தொடங்கினார்.

ஒவொரு பாடலும் புலவரின் கவியாற்றலை பறை சாற்ற திருக்கரசையின் அழகும் புராண கதை மரபும் சிறப்பாய் வெளிப்பட விடியும் வரை பாடலும் பயன் சொல்லலுமாய் இலக்கிய இரவாய் விடிய ஆடித் தீர்த்தம் இலக்கிய மரபோடு இணையும் விழாவாய் தொடர்கிறது.


மாவலி கொண்ட ஈழ நிலம்(நாவல்)-பகுதி2

ராஜேந்திரன் மலை

(ஒரு சிறு கதையாக தொடங்கினேன் இனி இது நெடுங்கதையாய் தொடரும் கொட்டியாரத்தில் ராஜேந்திறன் கால் பட்ட இடங்களினூடு பயணிக்கும் இக் கதை)

திருமங்கலேஸ்வரர் ஆலயம் அதன் அழகு கங்கை கொண்ட சோழபுரத்துக்கு நிகரான கலைநயம்.இயற்கையும் ஸ்தபதிகள் படைத்த செயற்கயுமாய் திருக்கரசை எழில் கூட்டி நின்றது.நேற்றய நிகழ்வுகளிலிருந்து இன்னமும் விடுபடாத மன்னன் ராஜேந்திரன் கரசைப் புலவரின் கவித் திறனில் கிறங்கிப் போனான்.புராண வழி வந்த அகத்தியர் கதையயையும்  இயற்கை அழகையும் கரசைப் புலவர் தன் காவியத்தின் மூலம் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் என்பதையும் ,கம்பனுக்கு நிகர் கரசைப் புலவர் என நேற்று பாராட்டியதையும் நினைத்து  தான் கட்டமைத்துக் கொண்டிருக்கும் ஈழ சாம்பிராஜ்ஜியத்தின் எதிர்காலம் பற்றிய திட்டமிடலுடன் தன் தளபதிகளை அழைத்தான்.

கொட்டியாரத்தில் தன் அடுத்த நகர்வு நித்திலம் கொலிக்கும் முத்தூராக இருக்கட்டும் என கட்டளையிட்டான்.கோயிலுக்கு சற்று தூரத்தில் அமைக்கப் பட்டிருந்த பாடிவீடுகளில் வீரர்களின் உற்சாக அணிவகுப்பும் முத்தூரை நோக்கிய பயணத்துக்கான.உற்சாகமும் கரை புரண்டோடியது.எல்லா வேலைப்பாடுகளும் முடிவடைந்ததால் சிற்ப ஸ்தபதிகளும் புறப்பட தயாராகினர்.

கங்கை கரையில் தன் கால்களை நனைத்தபடி சரிந்து படுத்திருக்கும் மருத மரக் கிளைகளை சிம்மாசனமாக கொண்டு சிந்தனை வயப்பட்டான் .ராஜேந்திரன் இந்த ஈழக்கரையிலேயே இருந்து விடலாம் போலதெரிகிறது எத்தனை அழகு இந்த மண்ணுக்கு.ஈழத்தில் எங்கும் கானாத அபூர்வ அழகு கொடியாரத்துக்கு என மனம்  நிறை மகிழ்விலிருந்தான் .
அவன் காதலி திரிபுவனையின்  நினைவுகள் மாவலியின் அழகில் தெரிந்தது காவிரிக் கரையில் திரிபுவனையுடன் காதலில் மகிழ்ந்த நாட்களில் மூழ்கிப் போனான் ராஜேந்திரன்.இந்த எழிலையும் அழகையும் அவளும் காணவேண்டுமல்லவா அவளோடு இந்த மாவலி ஆற்றங்கரையில் .ஆகா எத்தனை இன்பமாக இருக்கும் என் காதலிக்கு ஒரு கனவு   மாழிகை அமைத்தால் அது இங்குதான் என பல் வேறு எண்ணங்களில் குழம்பிபோனான் .தன்னுடய இந்த ஈழ வருகையின் தளபதியாக வழி நடத்தும் தங்கக் கால் வளை குருகுலத்து ராயனை அழைத்தான்.ஈழத்தில் பெற்ற வெற்றிகள் எல்லாவற்றுக்கும் துணை நின்ற செயல் திறன் மிக்க தளபதி அவன்.

ஆரவாரத்துடன் முத்தூரை நோக்கி சோழப் பெரும்  படை புறப் பட்டது.யானைப் படையணி தலைவன் வேலப்பணிக்கன் ராஜேந்திரனை வணங்கி மன்னனுக்கான கஜ ராஜனை கொணர்ந்தான்  கஜ ராஜனில் கம்பீரமாக பாய்ந்தான் ராஜேந்திரன்.தன் பிழிறலால் மகிழ்ச்சியயை வெளிப்படுத்த படையணி நகர்ந்தது.
 

மாவலி கொண்ட ஈழ நிலம் -பகுதி3

கங்கை வேலி(கங்கு வேலி)

கங்கை வேலி எங்கும் நெற்கதிர்களால் பந்தலிட்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது .மாவலி கங்கை இவ்வூரை சுற்றி வேலி போல் கங்கும் கரையுமாக வளைந்து வளைந்து வருவதால் இப் பெயர் பெற்றது.ஊரெங்கும் தோரணங்கள் தொங்க கங்கேஸ்வரர் கோயில் பூரண கும்ப வரிசையில் வாழ்த்துக்கு காத்திருக்கும் தருணம்.மேங்காமத்து கங்காணங்களும் அங்கு கூடினர்  மன்னன் வரவுக்காய்.கங்கேஸ்வரர் கோயிலும் ராஜேந்திரன் கட்டளைப் படிதான் நிர்மாணிக்கப் பட்டிருந்தது.கங்கு வேலி பார்பவர் மனதை அள்ளிச் செல்லும் அழகு நிலம் மா பலா வாழை என முக்கனி கூடல் அது.மூங்கில் புற்கள் காற்றில் ஒன்றோடொன்று மோதி உறுமும் ஒலி ஊர் வாசல் கோடிவரை ஒலித்து கட்டியம் கூற மன்னன் படயணியின் ஒற்றர் படை ஊரின் எல்லையில் முகாமிட்டிருந்தது.

மங்கல வாத்தியங்கள் முழங்க மன்னன் வரவு மகிழ்வின் தருணங்களாய் எல்லோர் முகத்திலும் சந்தோசத்தை தந்தது.மன்னன் மங்களேஸ்வர் கோயிலில் வழிபட சோழ நாட்டிலிருந்து கொண்டு வரப் பட்ட பெரும் கண்டா மணி நிவந்தமாக கையளிக்கப் பட தன் வரவையும் கோயில் பற்றிய பணிகளையும்  ஸ்தபதிகள் கல்வெட்டாய் பொறித்தனர்.தன் தந்தையார் உருவாக்கிய ராஜ ராஜேஸ்வரத்தின் பிரதி பிம்பங்களாகவே தான் அமைக்கும் கோயிகளை கருதினான்.

இப்போதெல்லாம் அவனுக்கு ஈழதேசம் கனவு தேசமாய் மாறிக்கொண்டிருந்தது இந்த தேசத்தின் மூதாதயரான தமிழ் மக்களை தலை நிமிர்ந்து வாழ வைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தான்.ஆக்கிரமிப்பாளனாக  வந்தவன் இன்று அரவணைப்பாளனாக மாறியிருந்தான்.காலம் காலமாக நடந்த சிங்கள மன்னர்களின் படையெடுப்புகள் இத் தேசத்தை சின்னா பின்னப் படுத்தியிருந்தது.இங்குள்ள பல குறு நில மன்னர்கள் சிங்கள மன்னர்களுக்கு கப்பம் செலுத்தி வந்தனர்.அந்த அடிமை முறையயை நீக்கி சுதந்திர ஆட்சியயை பிரகடன்ப் படுத்தினான் ராஜேந்திரன்.

ஆலய வெளியில் அமைக்கப் பட்டிருந்த மன்றத்தில் குடவோலை முறையில் ஊரின் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் நிகழ்வு மன்னன் முன்னால் அரங்கேறிக் கொண்டிருந்தது.

மன்னன் இழைப்பாற இடம் தேடி நகர்ந்தான்.எண்ணங்கள் சிறகடிக்க சமுளமரங்கள் பூத்துக் குலுங்கும் ஒரு சோலைக்குள் புகுந்தான் மன்னன்.பச்சைக் கிளிகள் கீச்சிட இரண்டு கிளிகள் இன்பம் பொங்க பேசி மகிழ்வது திரிபுவனையின் ஞாபகத்தை தஞ்சையிலிருந்து  இழுத்து வந்தது.கண்களுக்குள் அவள்

பொன்னேர் முகத்தாள்
கயல் நேர் விழியாள்
பூ நேர் இதழாள்
மென்னேர் நடையாள்

சிரிப்பால் சிலிர்ப்பாய்
சிவப்பால் அழகாய்
வனப்பால் எடுப்பாய்
வருவாள் என் மடியாய்

கன்னல் மொழியில்
கவிதைத் தமிழ் தருவாள்
என்னில் படரும் கொடியாய்
இன்பம் தரும் வல்லாள்

குதிரை கனைக்கும் சத்தம் ராஜேந்திரனை குழப்பிவிட எரிச்சல் மிகுந்தவனாய் எழுந்த அவன் முன் மண்டியிட்டு நின்றனர் ஒற்றர்கள்.
"அரசே பச்சையூர் பக்கம் எதிரிகள் ஊடுருவி இருப்பதாக செய்தி வந்துள்ளது நம் தளபதி குருகுலத்துராயர் நாம் போகும் திசையயை மல்லிகைத்தீவு வழியாய் சென்று எதிரிகளை துவம்சம் செய்யலாம் என்கிறார் நம் பயண வழி மாற்றப் படுகிறது"
என்று சொல்ல கறுத்து பெருத்த தன் போர்க் குதிரையில் மின்னெலென பாய தாயாராய் அணிவகுத்திருந்த அவன் வேழப் படை விர்ரென கிழம்பியது.
 

மாவலி கொண்ட ஈழ நிலம்(நாவல்)

ஆதி அம்மன் கேணி(அரியமாங்கேணி)

அரியமான்கேணியயை அண்மித்தது சோழப் படை

,மள மளவென மரங்கள் முறிபடும் ஒலியும் யானைகளின் பிளிறலும் குரங்குகள் கதறிக்  கொண்டு கிளைகளில் தாவும் ஓசையும் பறவைகளின் பயப் பீதியிலான கீச்சிடும் சத்தமும் அந்த பிராந்தியம் முழுவதையுமே  அச்சத்தில் உறைய வைத்துக் கொண்டிருந்தது

 .முன்னணியில் சென்ற வீரர்கள் சற்றுப் பின் வாங்க மன்னனின் மாயக் குதிரை படையணியயை ஊடறுத்து பாய எதிரிகளை நோக்கித்தான் மன்னர் விரைகிறார் என பெருத்த இரைசலுடன் எல்லா திசைகளிலிருந்தும்  மன்னன் துணையான ஈழப் படை சலசலத்தோடும் ஓடைகளை தாண்டிய போது விரைந்து சென்ற மன்னனது புரவி மறுபுறமாய் திரும்பி கால்களை மேலுயர்த்தி கனைத்து  பாய்ந்தது .வேகம் பெற்ற படையணி ஸ்தம்பித்தது .

பின்னால் உள்ள போர் வீரர்கள் என்ன நடைபெறுகிறது என தெரியாமல் தடுமாற ,இரண்டு யானைக் கூட்டங்களிடையே பெரும் சண்டை மரங்கள் எல்லாம் அடிதண்டம் படிதண்டமாய் சாய ,கொம்பன் யானைகள் ஒன்றோடொன்று மோதி புரண்டு சாய ,எங்கு சுற்றினாலும் மாவலியாளின் நீர் நீட்டம் யானைகளின் சண்டைக்கு கொஞ்சம் தடையாய் அமைய.மன்னனின் யானைப் படையின் வருகையும் சண்டையயை தணித்திருக்க வேண்டும்.

எல்லா காட்சிகளையும் மன்னன் சுவாரஸ்யமாக ரசித்துக் கொண்டிருந்தான்.யானைக் கூட்டத்தை பார்த்த போது அவன் நினைவுகள் தஞ்சையயை நோக்கி நகர்ந்தன.தஞ்சை ராஜராஜேஸ்வரம் கட்டப் பட்ட போது யானைகளின் துணை கொண்டு கற்கள் கொண்டுவரப் பட்டமையும் ,பெரும் யானைகள் கற்களை தங்கள் தந்தங்களில் தாங்கி  வேலை செய்தமையும் ,இந்த யானைகளுக்குத்தான் எத்தனை பலம் என எண்ணிக் கொண்டு  அரியமாங்கேணி அழகோடு அவனும் ஒண்றிப் போனான் ஒரு யுத்தம் முடிந்த களைப்பு எல்லோருக்கும்.

தொடுவான் திசையில் சூரியன் இரவு இருக்கைக்காய் புறப்பட ,நிலா நங்கை முகம் காட்டினாள்.நிலவைக் காணும் போதெல்லாம் திரிபுவனையும் அவனுள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்வாள்.

தூது சொல்ல பறவையில்லை
துணைக்கு இங்கு யாருமில்லை
ஏது சொல்வேன் என்னவளே
எந்தன் நிலைமை புரிந்து கொள்ள

மென் தோள்மயிலே -என்
வன் தோள் தழுவி
செந்தேன் தமிழாய் -என்
செவி வழி வருவாய்

நினைவுகள் நீட்சி பெற கனவுகளுடன் கண்ணுறங்கினான் ராஜேந்திரன்.ஈழப் படை என்றும் துணையிருக்க அச்சமற்ற இரவாய் ..
எல்லைகள்  தோறும் வீரர்கள் விழிப்புடன் இருந்தனர்.பொலநறுவையில் தோல்வியுற்ற சிங்கள அரசர்கள் மாவலியாற்றை கடந்து வரக் கூடும் என்ற அச்சம் எல்லோருக்கும் இருந்தது .மாறி மாறி காவல் காக்க வேண்டிய கடமை வீரர்களுக்கு.

வெல்லும் படையணி விழிப்பாயும் நெருப்பாயும் இருக்க வேண்டும் என்பது ராஜேந்திரனுடய தாரக மந்திரம் .அரியமாங்கேணியயை யாரும் ஊடறுத்து விடக்கூடாது என்பதில் எப்போதும் கவனம் இருந்தது.

நிலவு இப்போ பாலாய் எறிக்க தூரத்தில் சிறிது சல சலப்பை வீரர்கள் உணர்ந்தனர்.சாளம்பன் எனும் வீரன் வேவு பார்ப்பதில் கெட்டிக் காரன் எதிரிகள் நிழல் தெரிய நிழல் பார்த்து பாய்ந்தான் சாளம்பன் இருவர் அவன் கைப்பிடிக்குள் அகப்பட மற்றவர்களை சுற்றிவளைத்து ஒரு சூர சங்காரமே அரங்கேறியது.
 

Wednesday, 10 August 2016

கொட்டியாரம் வரலாற்று அறிமுகம்




கொட்டியாரம் வரலாற்று அறிமுகம்
இவ்வரலாற்றுக் குறிப்புக்களில் முஸ்லிம்கள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறவில்லை அது தனியாக பார்க்கப்படவேண்டிய விடயம். இங்கு நான் குறிப்பிடும் தகவல் என் அறிவுக்கு எட்டிய வரையில் தொகுக்கப்பட்டுள்ளன.இதற்கு மேலதிகமான ஈழத்தில் புராதனமான வரலாற்று சான்றுகள் நிறைந்த இடங்களில் கொட்டியார பிரதேசமும் முக்கியம் பெறுகிறது. இங்கு கிடைக்கபெற்ற கல் வெட்டுக்கள்சாசனங்கள்இலக்கியங்கள்செப்பேடுகள்பழைய கட்டிட இடிபாடுகள்தொல்மரபுக்கதைகளும் பாடல்களும் இப்பிரதேசத்தின் வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட சான்றுகள்
பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தய பழம் தொல் குடி இடப்பெயர்வுகள் இப்பிரதேசத்தில் உள்ள துறைமுகங்களான இளக்கந்தைஇலந்தத்துறைவெருகல் ஆகியவை பயன்படுத்தப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன. வெருகல் பிரதேசத்தில் கண்டெடுக்கபட்ட முதுமக்கள் தாழி கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால மனித நாகரிகத்தை சுட்டி நிற்கிறது. அத்தோடு கறுப்பு சிவப்பு மட்பாண்ட அழிபாடுகள் தொல்பழங்கால மரபை சுட்டி நிற்கின்றன.
கிறிஸ்துவுக்கு முன் உள்ள சன்றுகளில் மிக முக்கியமான இரண்டு கல்வெட்டுக்கள் இங்கு நம் கவனத்தை ஈர்க்கிறது. சேனையூர் கட்டைபறிச்சான் பகுதியில் பள்ளிக்குடியிருப்பு செல்லும் வழியில் அமைந்திருக்கும் கச்சக்கொடி மலையில் காணப்படும் ஒரு கல்வெ
தமிழ் பிராமி சாசனமாக உள்ளது
ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய
என்பது இதன் வாசகம் இந்த எழுத்துக்களில் ம தமிழ் பிராமிக்குரியதாக உள்ளது இதனை படியெடுத்து வாசித்த தொல்லியல் துறை பேராசியர் க. இந்திரபாலா இக் கல்வெட்டு கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என உறுதிப்படுத்தினார். இதே சாயலிலையே வெருகல் சித்திரவேலாயுத கோயிலுக்கு பக்கத்தில் உள்ள ஒரு குன்றில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இதே வாசகங்களே அதிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவும் இப்பிரதேசத்தின் முன்னோர்களின் வாழ்வையும் வரலாற்றையும் உறுதிப்படுத்துகிறது.
இலக்கந்தை வேப்பங்குளம் பகுதியில் கூட்டமாக காணப்படும் நடுகற்கள் ஈச்சலம்பற்றைப் பகுதியில் உள்ள கல்வெட்டுக்கள்சீனம்வெளியில் கண்டெடுக்கப்ட்ட சில கல்வெட்டுக்கள் இப்பிரதேசத்தில் தமிழர்களின் தொல் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
எல்லாளன் பற்றி வழக்கிலுள்ள கதை மரபு தொன்ம் சார் நம்பிக்கைகள் ஈச்சலம்பற்றை செம்பொன்னாச்சி அம்மன் சிலையை எல்லாளன் கொண்டுவந்தான் என்ற கூற்றுக்கள் என்பனவும் எல்லாளன் இலங்கைத்துறையில் இறங்கி ஈச்சலம்பற்று வழியாக பள்ளிகுடியிருப்பு வந்து சேனையூரை கடந்து மல்லிகைத்தீவு மணலாறு வழியாக பொலனறுவையை அடைந்து அனுராதபுரம் சென்றதாக அந்தக்கதை நீழ்கிறது.
இப்பிரதேசத்தின் இளக்கந்தைநல்லூர்வாழைத்தோட்டம்வெருகல்சாலையூர் முதலான பிரதேசங்களில் காணப்படுகின்ற பூர்வ குடிமக்களின் தொடர்ச்சியான இருப்பென்பது இப்பிரதேச வரலாற்றில் அதன் பழமையை மேலும் சான்று பகிர்கிறது.
கிறிஸ்துவுக்கு பிற்பட்ட கால சான்றுகள்
பரந்த காடுகளையும்வயகளையும்மேச்சல் நிலங்களையும் கொண்டிருக்கும் இந்த பிரதேசம் தொடர்ச்சியான நகர்வுகளின் மூலம் இடம் மாறி வாழ்ந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. குடி நகர்வுகள் மாறி மாறி இடம்பெற்றிருக்கின்றன. இன்னமும் பாழடைந்த நிலையிலையே காணப்படுகின்ற நூற்றூக்கணக்கான குளங்களும் அதை அடியொற்றிக்காணப்படுகின்ற மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் குடியிருப்புக்கள் இருந்ததற்கான சான்றாதாரங்களாய் உள்ளன. உலகம் முழுவதும் மனித நாகரீகத்தின் வரலாற்றில் குடி நகர்வுகளின் சிதைவுகளாக இத்தகைய ஆதாரங்கள் தொல்வரலாற்றை உறுதிப்படுத்துகின்றன. ஆபிரிக்க லத்தீன் அமரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு இந்த வகையிலான ஆதாரங்களே பெரிதும் பயன்பட்டன.
இளக்கந்தக்குளப் பகுதியில் காணப்படுகின்ற அகலமான செங்கற்களால் கட்டப்ப்ட்ட கட்டிடதொகுதியின் அழிபாடுகள் சமிளங்குடாப் பகுதியில் தென்படும் சான்றுகள்சோலைப் பள்ளத்தில் கிடைக்கக் கூடிய மட்பாண்டங்கள்பெண்டுகள் சேனையில் காணப்படுகின்ற அழிபாடுகள்உலவியா குளமும் அதன் சுற்றாடல்களும்ஆதணோடினைந்த உலாவியன் எனப்படும் மன்னன் பற்றிய செய்திகள்அரியமான் கேணியிலே காணப்படுகின்ற பழைய மக்கள் குடியிருப்புக்கான தடயங்கள் என இப் பிரதேசத்தின் வரலாற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன. இங்குள்ள மக்களிடம் வழங்கி வருகின்ற அசோதேயன் என்கிற மன்னன் பற்றிய கதைகளும் இந்த வரலாற்று ஓட்டத்தில் இணைக்கப்பட வேண்டியதே.
சிற்பங்கள் சொல்கின்ற வரலாற்று செய்திகள்
ஒரு பிரதேசத்தின் வரலாற்றில் பழங்கால சிற்பங்களும் ஓவியங்களும் மிக நம்பிக்கைக்குரிய சான்றுகளாக உள்ளன. உலக மனித வரலாறு குகைகளில் புராதன மனிதன் தீட்டிய ஓவியங்களே மனித வரலாற்றை பின்னகர்த்தி சென்றன. அதுபோலவே இப்பிரதேசத்தில் காணப்படும் சிற்பங்கள் நமக்குச்சில வரலாற்றுச்செய்திகளை சொல்கின்றன.
தமிழ் நாட்டினுடைய வரலாற்றில் பல்லவர்கால சிற்பங்கள் புடைப்புச்சிற்பங்களாக செதுக்கப்பட்டன. சம்பூரில் பத்திரகாளி கோயிலில் காணப்படுகின்ற பழைய பத்திரகாளி சிற்பம் புடைப்பு சிற்பமாகவே உள்ளது. மிகவும் நேர்த்தியான வேலைபாடுகளை இச்சிற்பம் கொண்டுள்ளது. இது பல்லவர்காலத்தின் பிற்கூற்றை நினைவு படுத்துகிறது. கி.பி ஏழாம் நூற்றாண்டின் கடைசிக்கால பகுதியைச்சேர்ந்த சிற்பமாக இது இருக்கலாம் போல தெரிகிறது. இந்தச்சிற்பத்தைப்போலவே கட்டைபறிச்சான் அம்மன் நகரில் காணப்படுகின்ற அம்மச்சியம்மன் சிலையும் ஒத்த தன்மையுடையதாக உள்ளது.
பல்லவர்காலத்தில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் திருக்கோணேஸ்வரத்தை பாடுகின்ற போது
கரைகளு சந்தும் காரகிற்பிளவும்
அளப்பெரும் கனமனி வரன்றி
குரைகலோதம் நித்த்கிலம் கொலிக்கும்
கோணமாமலையமர்ந்தாரே
எனும் வரிகளில் வருகின்ற கரைகளு சந்துகாரகிற் பிளவு ஆகியன கொட்டியாரத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட விழைபொருட்களாக உள்ளன அடுத்த வரிகளில் வருகிற நித்திலம் என்னும் சொல் முத்தைக்குறித்து நிற்கிறது. மூதூர் கடற்கரையோரப்பகுதிகள் முற்காலத்தில் முத்துக்குளிக்கும் இடங்களாக இருந்தன. அதன் காரணத்தினாலையே முத்தூர் எனப்பெயர் பெற்று பின் மூதூராயிற்று. இது கொட்டியாரத்தினுடைய வரலாற்றின் தொடர்ச்சியை மேலும் உறுதிப்படுத்தி நிற்கிறது.
சோழர்கால சான்றுகள்
சோழராட்சிக்காலத்தில் இப்பிரதேசம் சோழமன்னர்களின் முக்கிய ஆட்சிப்பிரதேசமக இருந்துள்ளது. சோழர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களை பிரமோதயங்கள் என்று அழைத்தனர். கொட்டியாரமும் தனியான பிரமோதயமாகவே கருதப்பட்டுள்ளது பிரமோதயங்கள் வள நாடுகள் என குறிப்பிடப்பட்டு அந்த வள நாடுகளுக்கு பொறுப்பானவர்கள் கானகன் என அழைக்கப்பட்டனர். தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சுற்று மதிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் கொட்டியார கானகன் பற்றிய குறிப்பு காணப்படுகிறது in the royal temple rajaraja and instrument of imperial cola power என்ற கீதா வாசுதேவன் எழுதிய நூலில் 87 ம் பக்கத்தில் கொட்டியாரம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கொட்டியாரத்தில் இருந்து தஞ்சைப்பிரகதீஸ்வர் கோயிலுக்கு நெல்லும் தங்கமும் எண்ணையும் வரியாக செலுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சோழர்கால சான்றுகளில் அவர்களது கல்வெட்டுக்களும் முக்கிய ஆதாரங்களாக உள்ளன மூதூரில் இருந்து செல்கிற போதும் 64ம் கட்டைக்கு பக்கத்தில் உள்ள 3ம் கட்டை மலை என்று சொல்லப்படுகின்ற ராஜவந்தான் மலையில் கிழக்கு அடிவாரத்தில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அக்கல் வெட்டானது மேற்குறிப்பிட்ட மலையில் ஒரு கோயில் இருப்பதாகவும் அந்த கோயிலுக்கு மலையில் இருந்து பார்க்கிற போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிற வயல் நிலங்கள் கோயிலுக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது இக்கல் வெட்டை வாசித்த க,. இந்திரபாலா இதை உறுதிப்படுத்தியுள்ளார் ராஜேந்திர சோழனது காலத்தின் எழுத்து நடை இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு ராஜேந்திர சோழன் பெயராலயே இந்தக்கல் வெட்டு உள்ளது.
கங்குவேலி சிவன் கோவிலில் காணப்படுகிற ஒரு கல் வெட்டு சோழர்காலத்தையே குறிப்பிட்டு நிற்கிறது மேலும் அகழ்வாராய்ச்சிகள் செய்யப்படுகிற போது நிறையவே நாம் தகவல்களைப்பெறலாம்.
இதனை விட சம்பூர் பிரதேசத்தில் காணப்பட்ட தொட்டில் கல் அதனை ஒத்த அழிபாடுகள்,சேனையூர் வீரபத்திரன் கோயிலில் காணப்படுகின்ற பொலன்னறுவை சிவன் கோவில் பாணியிலான அடித்தளமாக அமைந்த கட்டிட இடிபாடுகள்தில்லங்கேணியில் வைத்து வழிபட்ட தற்போது கட்டைபறிச்சான் கும்பத்துமாலின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் இப்பிராந்தியத்தில் சோழச் செல்வாக்கினை மேலும் உறுதிபடுத்துகிறது மல்லிகைத்தீவிலுள்ள பழைய சிவன் கோவிலுக்கான அடிப்படைகள் சோழச்செல்வாக்குக்கு உட்பட்டதே
திருமங்கலாயும் சோழர்களும்
அகஸ்தியஸ்தாபனம் என்று அழைக்கப்படும் திருமங்கலாய் பிரதேசம் சோழமன்னர்களின் ராசதானியாய் இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைந்ததாய் உள்ளது.அன்ன்குள்ள கட்டிட அழிபாடுகள் அதனை நிருபிக்கின்றன.இங்குள்ள சிற்பங்கள் சிவலிங்கம் என்பன சோழர் காலத்தவையே என்பது தொல்லியலாளர்கள் நிருபித்துள்ளனர்.பொலநறுவையில் உள்ள சோழர்களின் சிவன்கோயிலை ஒத்த தன்மை இங்கு காணப்படுகிறது.இப்பிரதேசத்தை மையமாகக்கொண்டு எழுந்த திருக்கரசைப்புராணம்.புராண ரீதியாக சிவபெருமானின் திருமணத்தோடு தொடர்புபட்டு அகத்தியர் ஈழ நாட்டுக்குரியவர் என்பதையும்வலியுறுத்துகிறது.அத்தோடு வளமான ஒரு இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.இன்றுவரை தொடர்கின்ற திருக்கரசைப்புராண படிப்பு ஒரு இலக்கியமரபிலான கல்விமுறமையின் தொடர்ச்சியுமாகும்.ஒரு நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கியமைக்கான சாட்சியே திருக்கரசை புராணமும் அகஸ்திய ஸ்தாபனமுமாகும்.சோழப்பேரரசு செல்வாக்கு செலுத்திய 10ம்,11ம்,12ம்நூற்றாண்டுகளில் இப்பிரதேசம் மிகுந்த செல்வாக்கு செலுத்திய இடமாக இருந்துள்ளது.திருமங்கலாயும் அகஸ்தியஸ்தாபனமும் கொட்டியாரத்தின் வரலாற்று மூலங்களின் முக்கிய தடங்கள்.சோழப்பேரரசுக்கும் இப்பிரதேசத்துக்குமான தொடர்புகள் கடல் வழியாக இலந்தத்துறையூடாக நேரடியாகவே இருந்துள்ளன பொலநறுவைக்கான தொடர்புகளையும் இங்கிருந்தே மேற்கொண்டிருக்கலாம் போல தெரிகிறது.ஏனெனில் மகாவலி கங்கையின் அடுத்த கரை பொலநருவையின் எல்லைக்குட்பட்டது.இன்றய சோமாவதிக்கூடாக இத்தொடர்புகள் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
கோணேசர் கல்வெட்டு தரும் தகவல்கள்.
கொட்டியாரப்பிரதேசத்தின் வரலாற்றை மேலும் தெளிவு படுத்தி விளங்கிக் கொள்ள கோணேசர் கல்வெட்டு பெரிதும் உதவுகிறது.குளகோட்டு மன்னன் திருகோணமலை பகுதி முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தியிருந்த வேளையில்இப்பிராந்தியத்தை நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்து ஆட்சி செய்தான் நன்கு பிரிவுகளுக்கும் நான்கு வன்னிபங்களை நியமித்திருந்தான்.
1.திருக்கோணமலை வன்னிபம்
2.கட்டுக்குளப்பற்று வன்னிபம்
3.தம்பலகாமப்பற்று வன்னிபம்
4.கொட்டியாரப்பற்று வன்னிபம்
வன்னிபம் என்பது சிற்றரசுகளையே குறிக்கிறது.இலங்கை வரலாற்றில் பல வன்னிபங்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
சோழர்காலத்திலிருந்து இந்த வன்னிப முறைகளுக்கான சான்றுகள் காணப்படுகின்றன.பன்னிரண்டாம் நூற்றண்டிலிருந்து ஆங்கிலேயர்கள் காலம் வரை கொட்டியாரத்தில் வன்னிபங்கள் அதிகாரத்திலிருந்துள்ளனர்.
கோணேசர் கல்வெட்டு தருகின்ற மற்றொரு செய்தி திருவாசகப்புலவன் பற்றியதுகாஞ்சிபுரத்துக் கோயிலொன்றை சேர்ந்த ஒதுவார் குடிகளில் ஒன்றினை வரவழைத்தமை.அக்குடியிலுள்ள ஒருவனை திருக்கோணேஸ்வரத்திலே திருப்பதிகம் பாட நியமித்தமை,அவனுக்கு திருவாசகப்புலவனென்று பெயர் சாத்தியமை.பரவணி ஆட்சியாக பள்ளவெளியில் இண்டவண நிலமும் சம்பூரும் மானியமாக வழங்கி செப்பேடு கொடுத்தமைபுலவன் வ்ரவு எனும் தலைப்பில் காணப்படுகின்றன.
கோணேசர் கல்வெட்டின் விரிவாக எழுந்த திருக்கோணாசல புராணமும் கொட்டியாரம் பற்றிய வரலாற்று செய்திகளை தருகிறது.
கோணேசர் கல்வெட்டில் உள்ள பின்வரும் பாடல்கள் கொட்டியாரம் பற்றிய முக்கியமான செய்திகளைத்தருகின்றன.
பாடல்16
தானதிக திருமலைக்கு நாற்காத வழி திருத்தித் தானும் கோண
மான பரற்கென அளித்தேன் கொட்டியாரப் பகுதியோர் மகிழ்த்தே
செய்தல்
ஆன துவர்க்காயினுடன் வெள்ளிலையும் அருங்கதலிக் கனியும்
சாந்தும்
ஊனமறு பால் தயிர் நெய் அரிசி ஒரு நூறு அவணம் உகந்தே ஈதல்
கொட்டியாரப்பற்றில் நான்கு காத வழி தூரத்திற்கு உற்பத்தி விளை நிலங்களை உண்டாக்கி கோணேசப்பெருமானுக்கென கொடுத்தேன் அந்தக்கொட்டியாரப்பற்றில் வாழ்பவர்கள் மகிழ்ந்து செய்ய வேண்டியது யாதெனில் கோணெசர் கோயிலுக்கு பாக்கும்வெற்றிலையும்,வாழைப்பழமும்,சந்தணமும்,குற்றமற்ற பால்,தயிர் நெய்யும் நூறு அவண அரிசியும் கொடுத்துவரவேண்டும்
17ம்பாடல் ஈதலுடன் ஏரண்டம் இருப்பை புன்னைப்பருப்பு இவைகள் இறையாத்தீவில்
சேமமுற ஒப்புவிக்கச் செக்காட்டி எண்ணையுற திருந்த ஆட்டி
ஓதரிய கெளளிமுனை மீகாமனிடத்தில் வரவு வந்தே கோண
தீதமுற குருகுல நற் கணக்கில் உள்ளபடி நிறைவாய் ஊற்றல்
இலுப்பை புன்னைப்பருப்புக்களை இறையாத்தீவில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் அவைகளை அவர்கள் செக்கிட்டு ஆட்டி ,எண்ணெய் வகைகளை தனித்தனியே ,எடுத்துச்சென்று சொல்லுதற்கரிய கெளளிமுனையிலுள்ள மிகாமனிடத்தில் கொடுக்க வேண்டும்.அதை அவர்கள் ஏற்றிவந்து கோணெசர் கருவூலத்தில் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்
இப்பாடல்கள் மூலம் கொட்டியாரத்தின் வளமும் அதன் வரலாற்றுத் தொடர்புகளும் மேலும் உறுதிப்படுகின்றன.
கொட்டியாரப்பற்றில் 16ம் 17ம் நூற்றண்டுகளில் அதிகாரத்திலிருந்த வன்னிபங்கள் பற்றிய சான்றுகளை பெறமுடிகிறது.வெருகல் சித்திர வேலாயுதர் கோயிலில் உள்ள சாசன்மொன்று கயிலாயவன்னியன் பற்றிய செய்தியை தருகிறது. இச் சாசன் வரிவடிவம் பதினாறாம் நூறாண்டுக்குரியதாய் உள்ளது.சாசனம் பின்வருமாறு அமையும்
சிறி சுப்ரமண்ய நம தெற்கு மதில் கயிலாய வன்னியனார் உபயம்
()திமராசா மகன் என செல்கிறது இக் கல்வெட்டு.கயிலாய வன்னியன் இப்பிரதேச வன்னிபமாக விளங்கியிருக்கின்றமை சான்றாக அமைகிறது.
பதினேழாம் நூற்றாண்டில் அய்ரோப்பியர்களால் எழுதப்பட்ட நூல்களோடு வெளியிடப்பட்ட தேசப்படங்களில் கொட்டியாரம்பற்று ஒரு இராச்சியமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையிலுள்ள இராச்சியங்களின் சிற்றரசுகளின் பட்டியலில் கொட்டியாரமும் ஒரு இராச்சியமாகவே கருதப்பட்டுள்ளது.
கண்டி அரசோடு கொட்டியாரம் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தமைக்கு கண்டிய அரசு வரலாற்றுச் செய்திகள் ஆதாரமாக அமைகின்றன. ஜயவீரபண்டாரனுக்கும்,விமலதர்மனுக்கும் அரசுரிமைப்போட்டி ஏற்பட்ட போது ஜயவீரனுக்கு ஆதரவாக கொட்டியார வன்னிபம் 7980 போர் வீரர்களையும் 600 கூலியாட்களையும்,1000 பொதிமாடுகளையும்,30 போர் யானைகளையும் 25அலியன் யானைகளையும் அனுப்பி வைத்தான் என்று சொல்லப்படுகிறது.
கி.பி.1611ம் ஆண்டு போர்த்துக்கேயருக்கெதிராக சிற்றரசுகளின் கூட்டமொன்றை கூட்டிய போது அக்கூட்டத்தில் கொட்டியாரப்பற்றின் வன்னிபமான இடலி கலந்துகொண்டதாகக் குறிப்புகள் உள்ளன.
கி.பி.1613ம் கண்டிராஜனின் இளவரசனை அழைத்து வரும் பொறுப்பு கொட்டியாரம் வன்னிபத்திடம் வழங்கப்பட்டிருந்தமைக்கான சான்றுகளும் காணப்படுகின்றன.
இரண்டாம் இராஜசிங்கன் கண்டி மன்னனாக ஆட்சி செய்த காலத்தில் இளஞ்சிங்கன் என்பவன் கொட்டியாரம் வன்னிபமாக விளங்கியுள்ளமையை அறிய முடிகிறது.
திருகோணமலை பற்றிய ஒல்லாந்தத் தளபதியின் குறிப்பில் கொட்டியாரப் பற்றில் நிலவிய அரசு பற்றிய செய்திகள் உள்ளன.
கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்ட றொபட் நொக்சின் குறிப்புக்களும் கொட்டியாரப்பற்றில் நிலவிய அரசுபற்றிய குறிப்புக்களைக்கொண்டுள்ளது.
வெருகல் சித்திரவேலாயுதர் காதல்” நூல் தரும் வரலாற்றுப் பதிவுகள்:-
தம்பலகாமம் வீரக்கோன் முத்லியார் எழுதிய இந்த நூல் வெருகல் கோயில் அரங்கெற்றம் செய்யப்பட்டமையை பின்வருமாறு கூறுகிறது.
துன்னுமிரு மரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்
வன்னிமை பொற்பாதம் வணங்கயினி சொல்லாதை
வன்னிமை தேசத்தார் மகாநாடு தான் கூட்டி
மின்னுமெழில் மண்டபத்தில் வீற்றிருக்கும் வேளையில்
கோதில் புகழ் சேர் வீரக்கோன் முதலிதானியற்றுங்
காதவரங்கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை
இதில் வருகின்ற தேசத்தார் மகாநாடு என்ற சொற்றொடர் மிக முக்கியமான வரலாற்றுச்செய்தியாக உள்ளது.கொட்டியாரம் ஒரு தேசமாகக் கருதப்ப்ட்டமைக்கான சான்று இங்குள்ளது.தேசத்தின் என்னும் போது,கொட்டியாரம் ஏழு ஊர்களாகப் பிரிக்கப்பட்டு ஏழு அடப்பன் மார்கள் நியமிக்கப்பட்டு பரிபாலனம் செய்யப்பட்டமைகான சான்றுகளை நாம் கங்குவேலி கல்வெட்டில் காணமுடியும்.
சேனையூரில் அடப்பன் முறை அண்மைக்காலம் வரை நடைமுறையில் இருந்தமையை இதன் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்.வெருகல் சித்திர வேலாயுத கோயிலின் வருடாந்தர திருவிழாவில்15ம் திருவிழா சேனையூர்கட்டைப்பறிச்சானுக்குரியது.இத்திருவிழாவை 1980ம் ஆண்டு பொது நிர்வாகத்தவர் பொறுப்பெடுக்கும் வரை சேனையூரின் கடைசி அடப்பனாக இருந்தவருடைய மகன் வீரக்குட்டி அவர்களே பொறுப்பாக இருந்தார் என்பது என்பது அடப்பன் முறையின் முக்கிய குறிப்பாகும்.
பிரித்தானியருடைய பரிபாலனத்தின் கீழிருந்த பொழுது உள்ளூர் முறைமைகளை அவர்கள் பின்பற்றியிருந்தனர் அடப்பன் உடையார் என தம் ஆட்சிக்கு துணையாக அவர்களை வைத்திருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
1970 களில் புதிய நிர்வாக முறை அறிமுகப்படுத்தும் வரை,ொட்டியாரப்பற்று காரியாதிகாரி எனும் அரச நிர்வாக முறைமையே இருந்தது.
அரசியல் ரீதியாக பாராளுமன்ற தேர்தல்கள் நடைமுறையில் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த பொழுது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும்,தமிழரசுக் கட்சியில் முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களும் மாறி மாறி தெரிவாகினர்.
1970 ஆண்டிலேயே முதன் முதலாக கொட்டியாரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக முடிந்தது.கிளிவெட்டியின் தவப்புதல்வனும்,ொட்டியாரத்தின் அரசியல் தலைவனாகவும் வெளிப்பட்ட திருவாளர் அ. தங்கத்துரை பரளுமன்ற அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார்.இவர் காலத்தில் மூதூரில் பல அபிவிருத்தி வேலைகள் நடப்பெற்றன.இன்று வரை மக்கள் மனதில் அவர் பெயர் நிலைத்திருக்கிறது.பயங்கரவாதம் அவரைப் பலி கொண்டாலும் பசுமையான அவர் நினைவு கொட்டியார மக்களின் மனதில் மாறாதது. தங்கத்துரை அண்ணன் என்ற அவர் நாமம் அழிக்க முடியாத ஒன்று.
அரசியல் ரீதியாக தமிழர் கூட்டணியின் உபதலைவராக மூதூரின் திருவாளர் அருளப்பு ஐயா அவர்கள் இருந்தமையும் பின்நாட்களில் அவருடைய மகன் அந்தோனி டொக்டர் தமிழர் கூட்டணியின் செயற்குழுவில் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டமையும் கொட்டியாரப்பற்றின் அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.
1977ல் ஏற்பட்ட புதிய தேர்தல் தொகுதி முறைமை கொட்டியாரத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழித்தது.
பின்நாளில் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் மூலம் 1988ல் கொட்டியாரம் தனக்கான பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்திருந்தது,ஆனால் அப்போதய அரசியல் சூழலால் வேறு ஒருவருக்கு அப்பதவி போனது.
1994ல் நடைபெற்ற தேர்தலில் திருவளர் அ. தங்கத்துரை திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரானார்.
1987ல் அமைக்கப்பட்ட மாகாணசபையில் கொட்டியாரப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக மூதுரைச்சேர்ந்த போல் ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.அண்மையில் உருவாக்கப்பட்ட கிழக்குமாகாண சபையில் ஈச்சிலம்பற்றை சேர்ந்த சைவப்புலவர் அ.பரசுராமன் மாகாணசபை உறுப்பினராகவுள்ளர்.
1981ல் மாவட்ட அபிவிருத்திசபை அமைக்கப்பட்ட போது திருவாளர் தங்கத்துரை அவர்கள் அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இப்பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தார்.
2001ம் ஆண்டில் கொட்டியாரத்தைச் சேர்ந்த சேனையூர் மகாவித்தியாலய முன்னாள் அதிபர் க.துரைரெட்டினசிங்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைத்தது.பின்பு2004ம் ஆண்டு தேர்தலிலும் அவர் கொட்டியாரத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்டமை இப்பிரதேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
அரசியல் ரீதியாக பார்க்கிற போது முன்னய கிராமசபை முறமை பல பிரதேச தலைமைகளை உருவாக்கியது. தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய பல கிராமசபைகள் சிறப்பாக செயல்பட்டன. பழைய கிராமசபை தலைவர்களை நினைவு கூருவது பொருத்தம் என நினைக்கிறேன். கிளிவெட்டி திரு.வினாயகமூர்த்திமல்லிகைத்தீவு திரு.சுப்ரமணியம்சம்பூர்,திரு.சரவணைதிரு.சிவராசா,திரு.தாமோதரம்கட்டைபறிச்சான்,திரு.கணபதிப்பிள்ளை(சேனையூர்) திரு.சிவபாக்கியம்(சேனையூர்),திரு.சு.குணநாயகம்(கட்டைபறிச்சான்)திரு.செ.இராசரெத்தினம்(மருதநகர்)திரு.சுந்தரமூர்த்தி.(கட்டைபறிச்சான்) ஈச்சலம்பற்று திரு.இ.ஞானகணேஸ்
எண்பதுகளில் புதிய உள்ளூராட்சி நடை முறை கொண்டுவரப்பபட்ட போது மூதூர் பிரதேச சபையின் முதல் தலைவராக கட்டைபறிச்சான் கிராமோதயசபைத் தலைவர் திரு.கோ.இரத்தினசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த இடத்தில் இந்த பிரதேசத்தின் கல்வி வரலாறு பற்றி பேசுவது பொருத்தம் என நினைக்கிறேன்.மூதூர் புனித அந்தோனியார் வித்தியாலயமே இப்பிரதேசத்தின் தாய் பாடசாலை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.இப்பிரதேச மூத்த கல்வியாளர்கள் இங்கிருந்தே உருவானார்கள்.திருவாளர் சிப்பிரியான் பெர்னாண்டோ அவர்கள் பல கல்வியாளர்கள் உருவாக வழி சமைத்தவர்களில் முதன்மையானவர். மற்றும் திரு அருளப்பு றோச் டி வாஸ் இவரே இன்றய மூதூர் மகா வித்தியாலயத்தை உருவாக்கியவர். திரு நடராசாதிரு அரசரெத்தினம்,திரு.செ.கதிர்காமத்தம்ம்பிதிருமதி லில்லி இராசரெத்தினம்திரு வ.அ.இராசரெத்தினம்,திரு.டி.ஜி.சோமசுந்தரம்திருமதி.மங்களம் சோமசுந்தரம். திரு.ஞானமுத்துபண்டிதர் நிக்கிலஸ்,பண்டிதர் சவரிமுத்து குரூஸ்திரு.கனகசபை,திரு.செல்லபாக்கியம் பாய்வா,திரு.இமானுவேல் குரூஸ்(செல்லையா),திரு.அன்ரனி நிக்கிலஸ்,திரு.ஒப்பிலாமணி பாய்வா,திரு.இராசேந்திரம்(ஈச்சலம்பற்று),திரு.சின்னத்தம்பி,திரு.லியோ றோச் டி வாஸ்,திரு.சுவாம்பிள்ளை,திரு.பெஞ்சமின் பாய்வா,திரு.செல்லத்துரை கொரய்ரா,திரு.கோபலபிள்ளை,திரு.கணபதிப்பிளை,திரு.கதிரவேற்பிள்ளை. திரு.கு.அம்பலவாணர்.திரு.கிருஸ்ணபிள்ளை,திருமதி.சின்னப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை,திரு.ஸ்ரனிஸ்லாஸ் இவர்கள் கொட்டியாரத்தின் மூத்த தலைமுறை கல்வி முன்னோடிகள். இந்நூலின் விரிவஞ்சி அடுத்த தலை முறை கல்வி முன்னோடிகள் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெறவில்லை
கொட்டியாரப் பிரதேசத்தில் கல்விக்கான பாடசாலைகளை உருவாக்கியவர்கள் கத்தோலிக்க மிசனிமாரும்,மெதடிஸ்த மிசனிமாரும் முதன்மை பெறுகின்றனர்.கிராமப்புறங்களில் அதிகமான பாடசாலைகளை உருவாக்கியவர்கள் மெதடிஸ்த மிசனிமாரே.1956 அரசு பாடசாலைகளை பொறுப்பேற்றபின்பு பல புதிய பாடசாலக்கள் உருவாகின.
கொட்டியாரத்தின் வரலாறு தனியொரு நூலாக வருகிற பொழுது மேலும் விரிவான விளக்கங்களைப்பெற முடியும்.இது ஒரு அறிமுகக் குறிப்பாகவே உங்கள் முன் வருகிறது.
பாலசுகுமார்,
மேனாள் பீடாதிபதி,
கலை கலாசார பீடம்